Jump to content

Wy/ta/ஏற்காடு

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > ஏற்காடு
Wy/ta/ஏற்காடு

ஏற்காடு அருவி

ஏற்காடு தேவாலயம்

ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைவாழிடம் ஆகும். ஏற்காடு கடல் மட்டத்தில் இருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படுகின்றது.

ஏற்காடு அஞ்சல் அலுவலகம்

அணுகல்

முதலில் சேலம் சென்றடையுங்கள். அங்கிருந்து 22 கி.மீ. மேல்நோக்கிச் செல்ல வேண்டும். சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமான இடைவேளியில் பேருந்துகள் உள்ளன. ஒருவருக்கு ரூ 22 செலுத்தி, ஏற்காட்டில் உள்ள கடைசி பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு இறங்குங்கள். ஏரிக்கு அருகில் பெரும்பாலான விடுதிகள், உணவகங்கள் உள்ளன. திரும்பி வரும்போது ஏரிக்கரை நிறுத்தத்தை விட ஏற்காட்டில் உள்ள துவக்க நிறுத்தத்தில் பேருந்து ஏறுதல் நல்லது, ஏனெனில் மலைப்பாங்கான சாலையில் பேருந்தில் நின்றுவருவது எளிதல்ல.

வானூர்தி வழியாக

அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் சேலம் (47), திருச்சிராப்பள்ளி (163 கி.மீ), பெங்களூரு (230 கி.மீ), கோயம்புத்தூர் (190 கி.மீ), சென்னை (340 கி.மீ) ஆகும்.

தொடருந்து வழியாக

அருகிலுள்ள தொடருந்து நிலையம் சேலம் சந்திப்பு (35 கி.மீ).

மகிழுந்தில்

ஏற்காட்டை தெற்கிலிருந்து சேலம் வழியாக இணைக்க நல்ல சாலை வசதி உள்ளது. சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக 358 கி.மீ. பெங்களூரிலிருந்து 222 கி.மீ. (ஒசூர் - கிருஷ்ணகிரி - தருமபுரி - சேலம் - ஏற்காடு) தொலைவில் உள்ளது. வாகனம் ஓட்ட சுமார் 5 மணி நேரம் ஆகும். பெங்களூரிலிருந்து ஒரு நாள் பயணம் போதுமானது. அதிகாலையில் தொடங்கி காலை 9 மணியளவில் ஏற்காட்டை அடைந்து, நாள் முழுவதும் செலவழித்து, மாலை 4 மணியளவில் ஏற்காட்டில் இருந்து திரும்ப இது போதும். ஒரே விசயம் என்னவென்றால், நீங்கள் அருவிகளைப் பார்க்க முடியாது, ஏனெனில் அது நடைபயணம் செல்லவேண்டி இருக்கும் அதற்கு நேரம் எடுக்கும்.

  • கோயம்புத்தூரிலிருந்து 190 கி.மீ. (அவினாசி வழியாக)
  • திருச்சிராப்பள்ளியிலிருந்து 163 கி.மீ. (நாமக்கல் வழியாக)
  • மதுரையிலிருந்து 271 கி.மீ. (கரூர் வழியாக)
  • மேட்டூரிலிருந்து 80 கி.மீ. (தொப்பூர் வழியாக)

சுற்றிவர

தானியில் (ஆட்டோ ரிக்சா) சுற்றிப் பார்ப்பது மிகவும் வசதியானது. பகோடா பாயிண்ட், இரண்டு கோயில்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் காட்சிமுனை, ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா போன்ற முக்கிய இடங்களுக்கு ஒரு நாள் பயணத்திற்கு சுமார் ₹350 செலவாகும். மான் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரி ஆகிய அனைத்தும் அருகிலேயே உள்ளன, அவற்றை கால்நடையாக அணுகலாம்.

தானியில் செல்வதைவிட அதிக வசதி தேவைப்பட்டால், நான்கு இருக்கைகள் கொண்ட மகிழுந்தில் ஒரு நாள் பயணத்திற்கு சுமார் ₹450 செலவாகும்.

அனைத்து கட்டணங்களும் பிப்ரவரி மாதத்திற்கானவை; உச்ச பருவத்தில் அவர்கள் கூடுதல் கட்டணம் கேட்கக்கூடும்.

பார்க்க

அண்ணா பூங்கா
  • அண்ணா பூங்கா. ஏரிக்கு அருகில் இந்தப் பூங்கா உள்ளது. மே மாதத்தில் "மலர் கண்காட்சி" நடத்தப்ப்படும் ஒரு பூங்கா ஆகும். அண்ணா பூங்காவிற்குள் இருக்கும் ஜப்பானிய பூங்காவை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். குழந்தைகள் சுற்றி விளையாடலாம், பெரியவர்கள் ஓய்வெடுக்கலாம். நுழைவுச் சீட்டு பெரியவர்களுக்கு ரூ 2 மற்றும் ஒளிப்படமிக்கு (கேமரா) ரூ 10. செலவிடக்கூடிய குறைந்தபட்ச நேரம்: சாதாரண மக்களுக்கு 30 நிமிடங்கள்.
  • ஆர்தர் இருக்கை. அல்லது ஆர்தர் சீட் பெரிய ஏரி, ஏற்காடு நகரம், சேர்வராயன் சிகரத்தின் பறவைக் காட்சியை இந்தக் காட்சி முனையிலிருந்து காணலாம். நகரத்தின் மையப் புள்ளியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள செங்குத்தான சாலையில் சென்றால் இந்த இடத்தை அடையலாம்.
  • கரடிக் குகை. இது ஒரு தனியார் சொத்தாகும். இங்கு அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். ஒரு காலத்தில் சென்னையைச் சேர்ந்த பிரபல குற்றவியல் வழக்கறிஞரான நார்டனுக்குச் சொந்தமான பழைய ஐரோப்பிய பங்களா. இந்த பங்களாவை ஒட்டி மலையின் ஆழத்திற்குச் செல்லும் ஒரு குகை உள்ளது. முதல் 60 அடிக்கு பிறகு, மேலும் உள்ளே செல்ல நான்கு கால்களில் தவழ வேண்டி இருக்கும்.
  • பியர்ஸ் மலை. இந்த மலை ஏற்காட்டின் தென்கிழக்குப் பகுதியில் மான்ஃபோர்ட்டை ஒட்டி குறுக்காக உள்ளது. இது சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டின் கிழக்கே அமைந்துள்ளது; பள்ளிகள் மற்றும் குருமடங்களால் சூழப்பட்ட ஏற்காட்டின் பகுதியின் பரந்த காட்சியைக் காணலாம். ஏற்காடு நகரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • மணிப் பாறை. அல்லது பெல் ராக் பி.எஸ்.ஐ வளாகத்தில் உள்ள ஒரு பாறையில் கல்லால் அடித்தால் மணி ஒலிக்கும். பாறையை அடைய நீங்கள் மேலே ஏற வேண்டும். நுழைவுச் சீட்டு பெரியவர்களுக்கு ரூ 3, ஒளிப்படமிக்கு ₹10. ஞாயிற்றுக்கிழமை, தேசிய விடுமுறை நாட்களில் இது மூடப்படும். செலவிடக்கூடிய குறைந்தபட்ச நேரம்: சாதாரண மக்களுக்கு 25 நிமிடங்கள், இயற்கை ஆர்வலர்களுக்கு சில நாட்கள்.
ஏற்காடு ஏரி
  • பெரிய ஏரி அல்லது எமரால்டு ஏரி (ஏற்காடு ஏரி). ஏற்காடு நகரத்திற்குள் நுழையும் போது நீங்கள் முதலில் இந்த அமைதியான ஏரியைப் பார்க்கலாம். ஒரே கரையில் அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டமும் உள்ளது. படகு சவாரி வசதியும் உள்ளது. தெற்கில் உள்ள அனைத்து மலைவாழிட ஏரிகளிலும் இந்த ஏரி மட்டுமே இயற்கை ஏரியாகும். ஏரியின் மையத்தில் மிதக்கும் நீரூற்று எம்.ஏ.எல்.சி.ஓ ஆல் கட்டப்பட்டுள்ளது. இந்த ஏரி மான் பூங்கா, ஓய்வு பூங்கா, தமிழ்நாடு ஓட்டல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. படகு சேவைகள் நியாயமான விலையில் கிடைக்கின்றன (2 இருக்கைகளுக்கு ரூ75, 4 இருக்கைகளுக்கு ரூ95). மிதிபடகு (15 நிமிடம்) மற்றும் படகோட்டியுள்ள படகுகள் (30 நிமிடம்) கிடைக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன. குறைந்தபட்ச நேரம்: 20 நிமிடம்.
  • மான் பூங்கா. குழந்தைகள் விளையாட ஏற்றது. செவ்வாய்க்கிழமை தவிர காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
  • ஃபேர்ஹோம் பங்களா. டிப்பரரி சாலையில் உள்ள பல காலனித்துவ பங்களாக்களில் ஒன்று, இன்னும் நன்கு பராமரிக்கப்பில் உள்ளது. இது பழங்கால தளபாடங்களைக் கொண்டுள்ளது. இது தேநீர் விருந்துகள் மற்றும் வேட்டையாடிய காலத்துக்கு அழைத்துச் செல்கிறது. இது ஒரு பாரம்பரிய ஓட்டலாக நடத்தப்படுகிறது. பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும்.
  • கிரேன்ஜ். ஏற்காட்டில் உள்ள மிகப் பழமையான கட்டடங்களில் ஒன்றான இது, 1820களில் கட்டப்பட்டது. அப்போதைய ஆட்சியராக இருந்த எம். டி. காக்பர்ன், இந்தப் பகுதியில் முதல் வணிகத் தோட்டத்தை நிறுவி, தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட காபி, ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் பிற பழ மரங்களை நட்டார். தமிழ்நாட்டில் உள்ள மற்ற காபி தோட்டங்கள் இந்த எளிமையான தொடக்கத்திலிருந்தே தோன்றியதாகக் கூறப்படுகிறது. சிப்பாய் கலகத்தின் போது, இதன் ​​கூரையை வலுப்படுத்த பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது துப்பாக்கி பொருத்தும் வசதிகளுடன் கூடிய சுவர்கள் கட்டப்பட்டன, மேலும் 3 பீரங்கிகள் சாதகமான இடங்களில் பொருத்தப்பட்டன. நீண்ட கால முற்றுகை ஏற்பட்டால், அப்பகுதியில் உள்ள ஐரோப்பியர்கள் கிளர்ச்சியாளர்களைத் தடுக்க வேண்டியிருந்தால், சுமார் 6 மாதங்களுக்கு வேண்டிய பொருட்களை வைத்திருக்க ஒரு பெரிய நிலவரை அமைக்கபட்டது. ஆனால் ஒருபோதும் புரட்சி நடக்கவில்லை, அந்தக் காலம் எல்லாம் அமைதியாக இருந்தது. காபி மற்றும் ஆரஞ்சு தோட்டங்கள் மற்றும் சில்வர் ஓக் மரங்களுக்கு மத்தியில் கிரேன்ஜுக்கு அருகில் நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு ரிசார்ட் உள்ளது, இது நல்ல நிலையில் உள்ள பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான பயணமாகும்.
  • சொர்க்கத்தின் விளிம்பு (Heaven's Ledge). சூரியன் மறையும்போது காணும் அழகிய காட்சிகளைக் கொண்ட மேற்கு நோக்கிய ஒரு அழகிய பாறை. இது லூப் சாலையில் உள்ள கௌரி எஸ்டேட்டில் உள்ளது.
  • தோட்டக்கலைப் பூங்கா. இது ரோஜா பூங்கா மற்றும் குழந்தைகள் இருக்கையைக் கொண்டுள்ளது. ரோஜா பூங்காவில் பட்டன் ரோஸ் முதல் மிகப் பெரிய ரோஜா வரை பல்வேறு வகையான ரோஜாக்களால் நிரம்பியுள்ளது. அழகான ரோஜா செடிகளுடன் ஒரு "பச்சை ரோஜா" செடியும் வளர்க்கப்படுகிறது. பல்வேறு தாவரங்களின் கன்றுகள் நியாயமான விலையில் கிடைக்கின்றன. நுழைவுச் சீட்டு பெரியவர்களுக்கு ரூ2 மற்றும் ஒளிப்படமிக்கு ரூ10. செலவிடக்கூடிய குறைந்தபட்ச நேரம்: சாதாரண மக்களுக்கு 35 நிமிடங்கள், இயற்கை ஆர்வலர்களுக்கு சில நாட்கள்.
கிளியூர் அருவி
  • கிளியூர் அருவி. இந்த அற்புதமான அருவி ஏற்காடு ஏரியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இதை தென்மேற்கு அல்லது வடகிழக்கு பருவமழைக்குப் பிறகு இதைப் பார்வையிட வேண்டும். ஏற்காடு ஏரி மற்றும் சேர்வராயன் மலைகளின் பிற பகுதிகளிலிருந்து வரும் உபரி நீர், 90 மீ (300 அடி) உயர அருவியாக கிளியூர் பள்ளத்தாக்கில் ஆழமாக விழுகிறது. அருவியின் அடிப்பகுதி மற்றும் மேலிருந்து காணும் காட்சிகள் மூச்சடைக்க வைக்கின்றன. அருவியின் மேலிருந்து பள்ளத்தாக்கிற்குள் செல்லும் காட்சி மனதை மயக்கும். அருவிக்குச் செல்லும் பாதை ஒரு கற்காரை பாதையில் எளிதான மலையேற்றமாகும். கற்காரை மற்றும் எஃகு படிக்கட்டுகளில் சுமார் 250 படிகள் கீழே செங்குத்தான இடங்களில் இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால், எவரும் அருவிக்குச் செல்ல முடியும். வயதானவர்களும் சிறு குழந்தைகளுடன் செல்ல சற்று சிந்திக்கவேண்டும். வாகன நிறுத்துமிடம் நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது, மேலும் அங்கிருந்து 2 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். வறண்ட காலங்களில், அருவியானது முற்றிலும் வறண்டதாக இருக்கும். இங்கு பள்ளத்தாக்கின் அழகிய காட்சியையும் காணலாம்.
  • கோட்டச்சேடு தேக்குக் காடு. இந்த நிலங்களில் பயிரிட்டுவந்த மலைவாழ் பழங்குடியினர், பிளேக் நோய் தாக்கிய பிறகு, இந்த பகுதியை கைவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலங்கள் அரசாங்கத்தால் தேக்கு மரத் தோட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. வாணியாறு ஆறு இந்த தேக்கு காடு வழியாகச் சென்று வாணியாறு அணையை அடைகிறது. தேக்கு காட்டில் காட்டெருதுகள் அடிக்கடி காணப்படுகின்றன. நகரத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • லேடிஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் மற்றும் சில்ட்ரன்ஸ் சீட். ஏற்காடு மலைகளின் தென்மேற்கில், சேலம் நகரத்தின் தெற்குப் பகுதியில், காட் சாலையையும் தெற்கே சேலம் நகரத்தையும் பார்க்கும் இடத்தில், ஒரு பாறைத் தொகுப்பாக இவை உள்ளன. ஒரு வெள்ளை ஆங்கிலேயப் பெண்மணி தனது மாலை நேரங்களில் வந்து இயற்கையை இரசித்ததாகக் கூறப்படும் இருக்கை வடிவத்தில் ஒரு இயற்கை பாறை உள்ளது. கீழே உள்ள பள்ளத்தாக்கில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சுமார் 60 மீ (200 அடி) உயரத்தில் ஒரு அருவி உள்ளது. தொலைநோக்கிகள் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பார்வை கோபுரம் உள்ளது. சமவெளிகளில் உள்ள மாக்னசைட் படிவுகளையும், தெளிவான நாட்களில் மேட்டூர் அணையின் காட்சியையும் காணலாம். மில்லியன் கணக்கான மின்னும் விளக்குகளுடன் சேலம் நகரத்தின் இரவு காட்சியை தவறவிடக்கூடாது. லேடிஸ் சீட்டின் வலதுபுறத்தில் ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ், ஜென்ட்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட் உள்ளன. ஒரு சிறு பூங்கா உள்ளது, இது சுற்றுலாவில் அருமையான ஒரு இடமாகும். நகரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
மான்ட்ஃபோர்ட் பள்ளி
  • மான்ட்ஃபோர்ட் பள்ளி. மான்ட்ஃபோர்ட் பள்ளி 1917 ஆம் ஆண்டு ஏற்காட்டில் சகோதரர் டெனிசின் அயராத முயற்சியால் நிறுவப்பட்டது. இந்தப் பள்ளிக்கு புனித கேப்ரியல் சபையின் நிறுவனர் புனித லூயிஸ் மேரி கிரிக்னோயின் டி மான்ட்ஃபோர்ட்டின் பெயரிடப்பட்டது. கவர்ச்சிகரமான கட்டடங்கள், விசாலமான விளையாட்டு மைதானங்கள், நன்கு திட்டமிடப்பட்ட, அழகான தோட்டங்கள். தெற்கில் உள்ள அனைத்து பள்ளிகளும் பொறாமைப்படும் ஒரு நீச்சல் குளம் கொண்டது இதன் பரந்த வளாகம்.
  • ஆர்க்கிடேரியம் - இந்திய தாவரவியல் ஆய்வு மையம். இது இந்திய தாவரவியல் ஆய்வு மையத்தால் நடத்தப்படும் இரண்டு ஆர்க்கிடேரியங்களில் ஒன்றாகும். இங்கு ஏராளமான பூர்வீக ஆர்க்கிட் மலர்ச் செடிகள் உள்ளன. பூச்சிகளை உண்ணும் அரிய வகை லேடீஸ் ஸ்லிப்பரைக் காணலாம். தனியார் தோட்டங்களில் ஒன்றில் பதிவாகியுள்ள அரிய மரமான சேர்வவராய்ஸ் பாம்பாக்ஸ் இந்த பண்ணையில் அடையாளம் காணப்பட்டு பெருக்கப்பட்டுள்ளது. தாவர பிரியர்களுக்கு ஒரு விருந்தாகும். சனி, ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் மூடப்பட்டிருக்கும்.
  • பகோடா முனை. இது ஏற்காடு மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, மேலும் இது பிரமிட் முனை என்றும் அழைக்கப்படுகிறது. மலைவாழ் பழங்குடியினர் ஏதோ ஒரு நிகழ்வைக் குறிக்கும் வகையில் நான்கு குவியல் கற்களை ஒரு பகோடா அல்லது பிரமிட் அமைப்பில் உருவாக்கியதால் இந்த பெயர் வந்தது. இன்று இந்த பகோடாக்களுக்கு இடையில் ஒரு இராமர் கோயில் உள்ளது. இந்த இடத்திலிருந்து ஆத்தூர், அயோத்திப்பட்டினம் ஆகியவற்றின் அற்புதமான காட்சியைக் காணலாம். நகரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • ரிட்ரீட். புனித டான் போஸ்கோ (1815-1888) நிறுவிய ஒரு சமய சங்கத்தைச் சேர்ந்தது இந்த ரிட்ரீட். டான் போஸ்கோவின் சலேசியன்கள் என்று பிரபலமாக அறியப்படும் தனது ஆன்மீக மகன், பள்ளிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், விவசாயம், வர்த்தகப் பள்ளிகள் மூலம் கைவிடப்பட்ட இளைஞர்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று புனிதர் விரும்பினார். இந்த ரிட்ரீட் சமய ஒழுங்கின் மாணவர்கள் தங்கி படிக்கும் ஒரு நவநாகரிக இல்லமாக செயல்படுகிறது.
  • சேர்வராய பெருமாள் கோயில் சேர்வராயன் மலை ஒரு தட்டையான உச்சியை கொண்ட மலையாக, இது ஒரு பீடபூமியைக் கொண்டுள்ளது. சிகரத்திலிருந்து எல்லா பக்கங்களிலும் உள்ள காட்சிகள் அற்புதமானவை. மலைகளையும், மலைகளின் தொடரையும் கீழே பார்க்க முடியும். சேர்வராயன் மலைகளுக்கும் அருகிலுள்ள மலைகளுக்கும் இடையில் ஒரு வரைபடம் போல சமவெளிகள் விரிந்துள்ளன. ஏற்காடு நகரமும் நாகலூரும் இந்த மலையிலிருந்து தெளிவாகத் தெரியும். சேர்வராயன் கோயில் இந்த மலையின் உச்சியில் உள்ளது. இது சேர்வராய பெருமாளுக்கு கட்டபட்டுள்ளது. இந்த கோயில் குறுகிய, இருண்ட குகையில் அமைந்துள்ளது. மே மாதத்தில் நடைபெறும் திருவிழா, மலையின் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் பங்கேற்கும் ஒரு வண்ண நிகழ்வாகும்.
  • பட்டுப் பண்ணை (ம) ரோஜா தோட்டம். மல்பெரி சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பு, பட்டு நூற்பு முறையை இங்கு காணலாம். பட்டு பண்ணை (லேடிஸ் சீட்டிலிருந்து சிறிது முன்னோக்கிச் சென்று வலதுபுறத்தில் ஒரு மண் சாலையில் செல்லவும்) வெளியாட்களை அனுமதிப்பதில்லை. இனப்பெருக்கத்திற்கான பருவம் மழைக்காலமாகும். ரோஜா தோட்டத்தில், வண்ணமயமான ரோஜாக்களின் நல்ல சேகரிப்பைக் காணலாம். நகரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள இங்கிருந்து நாற்றங்கால் செடிகளையும் வாங்கலாம்.
இராஜ ராஜேஸ்வரி கோயில்
  • இராஜ ராஜேஸ்வரி கோயில். இந்த கோயில் 1983 ஆம் ஆண்டு திருக்கோவிலூர் தபோவனம் ஸ்ரீல ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளின் பரம்பரை சீடர் எச்.ஹெச். சுவாமி பூர்ணானந்த கிரி அவர்களால் நிறுவப்பட்டது, இப்போது அவரது மகன் வி. ஸ்ரீ அவர்களால் பராமரிக்கப்படுகிறது. இந்த கோயிலில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி தேவி ஏராளமான பரிவார தெய்வங்களால் சூழப்பட்டுள்ளார்.
  • டிப்பரரி காட்சி முனை. டிப்பரரி சாலை வழியாகச் சென்றால் ஏற்காட்டின் தெற்குப் பகுதியில் உள்ள இந்த காட்சி முனையை அடையலாம். அங்கிருந்து யானைப் பல் பாறைகளைக் காணலாம். இவை பூமியில் விழுந்த விண்கல்லின் எச்சங்கள் என்று கூறப்படுகிறது. இந்த மலைகளில் கிடைக்கும் கருங்கல்லுடன் ஒப்பிடும்போது இது தூய வெள்ளைப் பாறையாகும். டிப்பரரி எஸ்டேட் என்று அழைக்கப்படும் அருகிலுள்ள எஸ்டேட் ஒரு காலத்தில் 1930 முதல் 1940 வரை பிரித்தானிய இந்தியாவின் உயரடுக்கினர் வந்து செல்லும் ஒரு ஆடம்பரமான விடுதியாக இருந்தது. இது நகரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • வெள்ளை யானைப் பல். ஒன்று குண்டூர் கிராமங்களுக்குக் கீழே சேர்வராயன் மலை தெற்கு பகுதியில் உள்ளது, மற்றொன்று கிழக்கில் 18-மீ (60-அடி) பாலத்திற்கு மேலே, காட் சாலையைப் பார்த்து அமைந்துள்ளது. குண்டூருக்கு அடுத்துள்ள பெரியது சுமார் 35 மீ (120 அடி) உயரமுள்ள இரண்டு பாறைகளைக் கொண்டுள்ளது. இது தூய வெள்ளைப் படிகக் கல் பாறையைக் கொண்டுள்ளது. இது சுற்றியுள்ள பசுமைக்கும் சுற்றியுள்ள கருங்கல்லுன் கருப்புக்கும் முற்றிலும் மாறுபட்டது. மேலே ஏறுவது எளிது, ஆனால் கீழே இறங்குவது கடினம். ஏனெனில் பாறை மென்மையானது. உங்கள் கால்களுக்குக் கீழே நொறுங்க்க்கூடியது. டிப்பரரி எஸ்டேட்டிலிருந்து 60-அடி பாலத்திற்குச் செல்லும் குறுக்கு வழியில் அடையக்கூடிய சிறியது சில தங்கச் சுரங்கல்கல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதை சுமார் 2 மணி நேரத்தில் அடையலாம், அங்கிருந்து மேலும் 1 மணி நேரத்தில் ஏற்காடு அல்லது சேலத்திற்கு ஒரு பேருந்தில் செல்லலாம்.
  • ஏற்காடு நகரம். ஏற்காடு நகரம் கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. வட்ட தலைமையகம் ஏற்காட்டில் உள்ளது. இந்த நகரத்தில் பல்வேறு சமயப் பிரிவுகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் பயிற்சிப் பள்ளிகளைக் கொண்ட ஏராளமான குருமடங்களும், பள்ளிகளும் உள்ளன. மான்ட்ஃபோர்ட் பள்ளி மற்றும் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் ஆகியவை நாட்டில் பிரபலமானவை.
  • குருவம்பட்டி உயிரியல் பூங்கா - ஏற்காடு அடிவாரத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது.

வாங்க

ஏற்காட்டில் இயற்கை எண்ணெய்கள், வாசனை திரவியங்கள், காபி தூள், சரும பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம், அவை உண்மையிலேயே நல்லவையாகவும் பயனுள்ளவையாகவும் இருக்கும்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் நிறுவிய 'அகத்தியார் ஹெர்பேரியம்', சேர்வராயபெருமாள் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. மேலும் லேடிஸ் சீட் காட்சி முனையில் இருந்து திரும்பி வரும் வழியில் பாவினி வாசனை திரவியங்கள் கடை சில நல்ல விற்பனையாளர்களாவர். இந்த வகையான முகவரிகளை உள்ளூர்வாசிகளிடம் கேட்டால் அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.

உண்ண

  • கருப்பையா செட்டிநாடு மெஸ், ஏரிக்கு அருகில். சுவையான சப்பாத்திகள் ஒவ்வொன்றும் @ ₹18
  • வாட்டர்ஃபிரண்ட் உணவகம், ஏரிக்கு எதிரில்.
  • தம்பி பிரபாகரன் உணவகம், ஏரிக்கு அருகில்

உறங்க

  • கிளென்ராக் எஸ்டேட், http://glenrock.in, ☏ +91 4281 223264, +91 98865-82263. மர வீடுகளுடன் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த முகாம்.
  • தி கிரீன்பெர்ரி ரிசார்ட், பக்கோடா பாயிண்ட் சாலை, ☏ +91 4281-223333.
  • ஹேப்பி நெஸ்ட், ஜரினகாடு, ☏ +91 9943655222.
  • ஹில்டன் ஹில் ரிசார்ட்ஸ், பேருந்து நிலையத்திற்கு எதிரே.. காட்சிமாடத்துடன் கூடிய அறைகள்.
  • ஓட்டல் சேவராய்ஸ், மருத்துவமனை சாலை, ☏ +91 4281 222288, shevaroyshotel@yahoo.co.in.
  • தி லாஸ்ட் ஷோலா, ☏ +91 4281- 226737.
  • பொன் கைலாஷ் ஹாலிடே ஹோம், ஐந்து சாலைகள் சந்திப்பு, மான்டேஃபோர்ட் பள்ளிக்கு அருகில், ☏ +91 4281 222555. திரு. அப்துல் கயூம், மிகவும் நட்பு உணர்வுமிக்க மேலாளர். அறைக்கு ₹1300, தங்குமிடத்திற்கு ₹350.
  • ரஹ்மிஸ் அவுஸ் (மான்டேஃபோர்ட் பள்ளியிலிருந்து 500 மீ), ☏ +91 -99427-32644. ஹோலி கிராஸின் சகோதரர்களுக்குச் சொந்தமானது.
  • ராம்ஸ் இன், ஒண்டிக்கடை சந்திப்பு, ☏ +91 4281 222620. ₹2,000.
  • ரீஜண்ட் ஹில் சைடு ரிசார்ட், ☏ +91-94437 00000, vishukaliappa@gmail.com.
  • சோபா லாட்ஜ் (பேருந்து நிலையத்திற்கு அருகில்). ₹800.
  • ஸ்டார் ஹாலிடேஸ், ☏ +91-4281-223337, +91 9443553618 (மோலிப்). ஏரிக்கு அருகில்.
  • ஸ்டெர்லிங் ரிசார்ட், லேடிஸ் சீட் அருகில், ☏ +91 4281 222700.
  • தமிழ்நாடு ஓட்டல், ஏரிக்கு அருகில், ☏ +91 4281 223334, htnycd2008@yahoo.com. குறைந்தபட்சம் 20 இளைஞர்களுக்கு சேர்த்து விடுதி வழங்கப்படுகிறது. ₹1,100.
  • உமா லாட்ஜ், ஸ்டேட் வங்கி கட்டிடம், ☏ +91 4281222562. பழைய மற்றும் அழகான அறைகள். ₹600.
  • பாரஸ்ட் வியூ ரிசார்ட், எச்.பி.-1 பகோடா பாயிண்ட் சாலை, பகோடா பாயிண்ட் (பகோடா வியூ பாயிண்ட்), ☏ +91 9342222787